Tags » அனுபவம்

கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து

அறை நண்பர்கள் கிட்டத்தட்ட தினமும் வெளியே எங்காவது செல்வார்கள். உண்ட பின்னர் ஒரு நடை, விடுமுறை என்றால் அங்கோ இங்கோ ஒரு ஊர் சுற்றல் என்று இருப்பார்கள். என்னையும் அழைப்பார்கள். என் அறையில் அரிதாகவே மலையாளிகள் வந்து சிக்குவதுண்டு மற்றபடி பெரும்பாலும் தமிழ்ப் பையன்கள். அழைக்கும் போது சரியாக ஏதாவது படித்தபடியோ, படிப்பதற்கு தயாரித்தபடியோ இருப்பேன். எரிச்சலாவார்கள். ஆனாலும் தொடர்ந்து தினமும் ‘வாடா மச்சி’ என்று கூப்பிட்டபடியே இருப்பார்கள். இப்போது அறையைப் பகிர்ந்த நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னோடு இருப்பவர்கள். ஆதலால் அவர்கள் கிளம்பும்போது நான் கண்டு கொள்ளாமல் இருந்தால் கூப்பிடுவதில்லை. திரைப்படம் போவதாயிருந்தால் முன்னமே கேட்பார்கள். ஆனால் கிளம்பும்போது ஏதாவது திட்டிவிட்டோ, படிக்கவிடாமல் செய்யும் பொருட்டு சண்டையிட்டோ செல்வார்கள்.

ஏன் என்று யோசித்தால் நான் தமிழ் நாட்டுக்காரன் என்பது மட்டுமே காரணம். இங்குள்ளபோது வருடங்கள் ஆனாலுமே நம் பையன்கள் மற்ற கேரளப் பையன்களோடு இயல்பாக நட்பு கொள்வதேயில்லை. அவர்களோடு சுற்றப்போவதெல்லாம் ஒருவேளை அவர்கள் தமிழகத்தில் படித்திருந்தோ, சினிமாக்கள் மூலமோ ஓரளவு தமிழ் பேசுபவர்களாக இருந்தால் மட்டுமே நடக்கும். அப்போதும் கேளரப் பையன் இரண்டு குழுக்களிலும் இருப்பானே ஒழிய இவர்கள் அவன் இருக்கும் குழுவில் சேர்வதில்லை.

சொல்லப் போனால் மொழியறியாமை ஒரு பிரச்சனையே இல்லை. அவர்கள் உடல் மொழி பிடிக்காததாய் இவர்களுக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் விதம் பிடிக்காததாய் அவர்களுக்கும் இருக்கிறது. நம் தமிழ்ப் பையன்களும் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்று சொல்வார்கள். இங்கிருக்கும் வரை குறைந்தபட்சம் இந்த ஊரைப்பற்றி, இங்குள்ள மக்களைப் பற்றியுமாவது புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாதா, எனக்குமே அது ஒரு ideal மட்டுமே. செய்கிறேன் என்றும் சொல்வதற்கில்லை என்பேன். சினிமாவுக்கும், மால்களுக்கும் கொடுக்கிற நேரத்தில் கொஞ்சமாவது இந்த ஊரின் நிகழ்வுகளுக்கு ஒதுக்கக் கூடாதா என்று கேட்பேன்.

ஏதாவது பிரச்சனை வந்தால் சுத்தம்! கொஞ்சம் பக்கச் சார்பில்லாமல் இருக்கப் பார்த்தால் எனக்கு தமிழ் விரோத ஏழுத்தாளர்(!) என்கிற பட்டம் கிடைக்கும். கேரளப் பையன்களும் என்னையே அழைத்துப் புகார் சொல்வார்கள். இப்படியான சமயங்களில் படிக்கவே முடியாது என்கிற நிலமை உண்டாகும். அறைக்குள் உட்கார்ந்து தொலைபேசியில் பேசுவார்கள். ஒன்பது மணிக்கே நாங்கள் தூங்க வேண்டும் என்று விளக்கை அணைப்பார்கள். வெளியே உட்கார்ந்து படிக்க முடியாது. நல்ல வெளிச்சமில்லை கூடவே கொசுக்களும் இருக்கும். வேறு வழியே இல்லாமல் பக்கத்து அறைகளுக்கு ஓடுவேன்.

கேரளப் பையன்கள் பெரும்பாலும் எர்ணாகுளம் வருவது படிப்பதற்கு. நுழைவுத் தேர்வுக்கு அல்லது ஏதாவது பட்டயப் படிப்புக்காக வந்திருப்பார்கள். எனவே அவர்கள் அறையில் அமர்ந்து படிக்க எனக்கு எளிதாகும். அரிதாகவே இருபத்தைந்து வயதுக்குள் வேலை செய்ய வருபவர்கள். அவர்களும் வெளியே போனால் அழைப்பார்கள். அப்போதும் போலத்தான் பதில் நான் பதில் சொல்வது.

எனக்கும் இரண்டு வருடங்கள் ஆகியும் மலையாளம் பேசுவதற்கு ஏனோ வரவில்லை. அலுவலகத்தில் தொடங்கி, தங்குமிடம் வரைக்கும் எல்லாரும் என்னிடம் மலையாளத்தில் பேசுவதும் நான் தமிழில் பதில் சொல்வதும் நடக்கும். சில சமயங்களில் மட்டும் விளக்க வேண்டி வரும். ஏன், மலையாளியான ஆனால் எழுதப் படிக்கத் தெரியாமல் வடநாட்டில் வளர்ந்த நண்பர் ஒருவர்கூட தமிழ்நாட்டில் படித்த காரணத்தால் நல்ல தமிழில் பேசுவார்.

எனவே மொழியறியாமையினால் இங்கே எவரும் பிரிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் என்னைவிட நன்றாக மலையாளம் பேசுவார்கள் மற்றவர்கள். இருந்தும் நான் நெருக்கமாக இருக்கிறேன் என்பது என்னுடைய நினைப்பு மட்டும் தானா என்கிற கேள்வி எனக்கு இருந்தது.

அப்படி கடந்த வாரம் பக்கத்து அறைக்கு எதற்காகவோ போயிருந்தபோது, அடுத்த வாரம் இடுக்கி போகிறோம் வருகிறாயா என்று கேட்டார்கள். சரி நாமும் எங்கும் இவர்களோடு வெளியூர் போனதில்லையே, இவர்களும் நிச்சயம் ஊர் சுற்றத்தான் போகிறார்கள் என்று தெரியும். ஒருமுறை போவோமே என்று வருவதாகச் சொன்னேன். நிஜமாகத்தான் கூப்பிடுகிறார்களா இல்லை ஒரு மரியாதைக்கா என்கிற பயம் இல்லாமல் இல்லை. எனவே நானும் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் விட்டேன்.

ஆனால் தினமும் திட்டமிடும் போதெல்லாம் என்னைக் கூப்பிட்டு அபிப்ராயம் கேட்டு, தகவல் எல்லாம் சொல்லிச் செல்லவும் நிஜமாகவே போகிறோம் என்று உறைத்தது. சனிக்கிழமை விடியும் முன்னர் கிளம்பி கட்டப்பனை போய்ச் சேர்வது என்று திட்டம். அங்கே ரென்சனின் வீட்டில் தங்குகிறோம். ஒற்றை தினம் சுற்றுவோம். இரவு கோழிகள் வாங்கிச் சமைத்து, நீறேற்றுபவர்கள் ஏற்ற ஓரமாக நிற்போர் வெறும் கோழியும் மற்றவையும் தின்பது என்று திட்டம். இந்த பகுதிதான் அவர்களுக்கு பரவசம் கொடுக்கிற பகுதி. என்ன எல்லாரும் சமமாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். என்னையும் சேர்த்து மூவர் குடிக்காதவர்கள் எனவே கொஞ்சம் தைரியம் அப்படி எதுவும் செலவாகாது என்று. இரவு கழிந்து ஞாயிறு காலை திரும்புதல்.

வெள்ளிக்கிழமை காலை குடியுரிமையற்றோரில் ஒருவனாகிய ஆசிப்புக்கு வயிற்று வலி. முந்தைய இரவு நாங்கள் எல்லாரும் சாப்பிட்ட சப்பாத்திதான் காரணம். அப்போதே அய்யோ நான் வரவில்லை என்று அனத்தத் தொடங்கினான். அவன் எனக்கு நெருக்கமான நண்பனும்கூட. வாசிப்பு பழக்கம் என்பது திருஷ்டிக்கேனும் உள்ளவன். சென்று நான் மாத்திரை வாங்கிக் கொடுத்தேன். சரியாகும் வா போகலாம் என்றேன். ‘பார்கலாம் கண்ணா’ என்றான். ஒரு பதினோரு மணிக்கு மேலாக எனக்கும் வயிற்று வலி. உடற்ச்சூடு காரணம். பயத்தில் என்ன செய்ய என்று யோசித்தபடி நான் வேலை செய்யவில்லை என்று எழுந்து உள்ளே ஓடினேன். ஆறேழு தம்ளர் தண்ணீரும் இரண்டு தம்ளர் ஏழுமேலும் குடித்துவிட்டு அரைமணி நேரம் தூங்கி எழுந்தேன். எழுந்த பிறகுதான் ஞாபகம் வந்தது அலுவலகம் வந்ததில் இருந்து மூத்திரம் கழிக்கவேயில்லை! இவ்வளவு நீர் குடித்தும் ஒன்றும் ஆகவில்லை என்பதையும் கவனித்து பாட்டிக்கு அழைத்துப் பதறினேன். உண்மையில் எங்கே இடுக்கி போகமுடியாமல் ஆகிவிடுமோ என்றுதான் பதற்றம்.

அங்கே பாட்டியும் பதறினார். எழுமிச்சை பிழிந்து குடி, சீரகம் அரைத்து உப்பிட்டுக் குடி, இல்லை இளநீரேனும் வாங்கிக் குடி என்றார். நான் கொஞ்சம் பசி எடுத்ததால் என்ன செய்ய என்று யோசித்துவிட்டு சிறிது சாதம் மோர் விட்டுச் சாப்பிட்டேன். தூங்கி எழுந்ததுமே வயிற்று வலி சரியாகியிருந்தது. அவசர வேலையிருப்பதை பார்த்ததும் ஏன் வெறுமனே கிளம்புவது என்று உட்கார்ந்துவிட்டேன். மாலைக்குள் உடல் சரியாகவிட்டதைப் போலிருந்தது. சீக்கிரமே கிளம்பி பாலாரிவட்டம் வந்ததும் இரண்டு இளநீர் குடித்தேன். உண்மையில் ஊரே கொதிக்கிறது என்பதை கவனித்தேன். தமிழ்நாட்டின் மார்கழி குளிர் இல்லாமல் நான் வருந்துகிறேன் என்பது அடிக்கடி சொல்வதுதான். அலுவலகம் விட்டு பகலில் வெளியே வராததால் வெயில் தெரிவதில்லை. இரண்டு இளநீருக்கு எழுபது ரூபாய், போன மாதம்கூட இருபது ரூபாய்க்கு ஒரு இளநீர் குடித்தேன்.

அறையில் குளித்துத் தயாராகி மையக்கூடத்தில் இருந்த அறையொன்றில் சென்று ஆசிப்போடும் ரஞ்சித்தோடும் தங்கினேன். நள்ளிரவு ஒரு மணிக்கு எழுந்து ஊபர் பிடித்துச் செல்வோம். எங்களுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு படுத்தபோது மணி பதினொன்றுக்கு மேல். சரியாக ஒரு மணிக்கு எழுப்பிவிட்டார்கள். பல் விலக்கிவிட்டு உட்கார்ந்ததும் எழுதாமல் விட்ட நாட்குறிப்பை எழுதினேன். இரண்டு மணிக்கு கிளம்பி, முப்பது நிமிடத்தில் பேருந்து நிலையம் சென்று சேர்ந்தோம். போகிற வழியிலேயே புகைப்படம் எடுக்கத் தொடங்கியாயிற்று. அந்நேரம் அங்கிருந்த கடையில் சிலர் ஆளுக்கு இரண்டு தோசை சாப்பிட்டோம். அப்போதும் நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. பேருந்து சரியாக மூன்றே காலுக்கு வந்ததும் ஏறிவிட்டோம். உடனே கிளம்பவும் செய்தது. மொத்தம் ஏழுபேர். பேருந்து நல்ல ரோட்டிலேயே குலுங்கியபடி சென்றது. தூங்கவே முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்தபடி இருந்தோம்.

அருகில் இருந்தவன் மேல் சாய்ந்துதான் உறங்க முடிந்தது. அதுவும் அரைகுறை. இடையில் பேருந்து நிறுத்தும் போதெல்லாம் இறங்கி ஓடிப்போய் வந்தேன் என்பது நினைவிருக்கிறது. ஆசிப்புக்கும் எனக்கும் வயிற்று வலி சரியாகியிருந்தது எங்கே மீண்டும் வருமோ என்று நினைத்தேன். விடிந்ததும் தெரியவில்லை. ஏழு மணிக்காக குளிர் உறைத்ததும் தெளிந்தமர்ந்தேன். மொத்தம் ஜந்து மணி நேரம் பேருந்துப்பயணம். உறங்கியதால் மலையேற்றம் முழுவதும் காணாமல் போயிருந்தோம். விடியும் முன்னரே எடுத்து ஸ்வெட்டர் அணிந்திருந்தேன்.

கட்டப்பனையிலிருந்து உள்ளூர் பேருந்தில் எழுகும்வயல் சென்றோம். ஊர்கள் அத்தனையும் மலைச் சரிவுகளிலேயே அமைந்திருக்கிறது. சில வீடுகள் பார்க்க நேர்ந்தது, பெரும் பகுதி அந்தரத்தில் நின்றிருக்க, இரண்டோ நான்கோ தூண்கள் இறங்கிக் கீழே சென்று தாங்கியிருக்கின்றன. ரென்சனின் வீட்டாருக்கு சொந்தமான குன்று ஒன்றிலேயே விவசாயம் செய்து வாழ்கிறார்கள். காபி, மிளகு, மரவள்ளியும் கோகோவும் பயிரிட்டிருக்கிறார்கள். மிகச்சிறிய, எளிமையான வீடு. எழுகும்வயல் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் இரண்டு கிலோமீட்டருக்கு மேலாக நடக்க வேண்டியிருக்கும். நாங்கள் அட்டோவில் அடைந்துகொண்டு சென்றோம். ரென்சனின் அண்ணன் அப்பு வந்து எவரையும் செலவு செய்யவிடாது அழைத்துச் சென்றார்.

ஒரு தேநீர் குடித்திருந்தோம் நிறுத்தத்தில். அவர்கள் வீட்டில் அறிமுகமாக்கிக் கொண்டு காபி என்ற பெயரில் காலையுணவு, அப்பமும் கோழிக் கறியும்.சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது ஏற்பாடு செய்திருந்த மேலும் இரண்டு வண்டிகள் வந்தன. மூன்று ஸ்கூட்டர்கள், ஒரு ஸ்லெண்டர். இப்போது ஒன்பது பேர் இருந்தோம். ஸ்லெண்டரில் மட்டும் இருவர், நானும் ஆசிப்பும்.

முதலில் வீட்டிலிருந்து பகுதி தெரியும் குரிசுமலை போகிறோம். நேர்வழியில் ஏறாமல் குறுக்கு வழியே சரியாக இருக்கும் என்றார் அப்பு. அதில் ஏறுவதற்கே ஜிசனால் முடியவில்லை. இப்படிப் போனால் பதினைந்து நிமிடம் போதும். நேர் வழியில் ஒரு மணிநேரத்துக்கு சற்றே குறைவாய் தேவைப்படும். ரென்சன், அப்பு மற்றும் ஸ்ப்லென்டர் ஒட்டும் ஜிதின் ஆகியோர் படித்த பள்ளியிலிருந்து குறுக்கு வழி தொடங்குகிறது. முழுவதும் மலை. அதன் சிறிய சமதளத்திலும் விவசாயம். விவசாயம் இல்லாத இடத்தில் வீடுகள்.

இந்த பகுதியின் முக்கியமான கிருஸ்துவத் தலம் குரிசுமலை. கிருஸ்து சிலுவை சுமந்ததை அதில் மரித்ததை அடையாளப்படுத்தும் விதமானது. மலையடிவாரத்திலும் நிற்க இடம் இருக்காது முக்கிய தினங்களில் என்றனர், புனித வெள்ளி அதில் மிக முக்கியமானது. அதனால் சிறிய சிலுவைகள் முதல், பெரிய மரத்தாலான சிலுவைகள் வரை தூக்கிச் சுமந்து வரப்படும். அங்கே மிகப் பெரிய வண்ணம் பூசிய சிலுவை ஒன்று, இருபக்கம் படிக்கட்டுகளும் ஒரு அறையும் அடித்தளமாகக் கொண்டு. எல்லாம் புகைப்படம் எடுத்தார்கள், எடுத்த பிறகு சென்று பிரார்த்திக்கவும் செய்தார்கள். அங்கிருந்து ராமக்கல் மேட்டின் காற்றாலைகள் தெரிந்தது. எப்போதும் அதிவேகத்தில் காற்று வீசியபடி இருக்கும் பகுதி. குறவன், குறத்தி சிலை அங்கேதான் இருக்கிறது. சங்க காலத்தின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை. இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்கு நின்று பார்த்தால் தமிழ் நாட்டின் சிறுபகுதி தெரியும். ஆனால், அங்கே போவோமா என்று தெரியாமல் இருந்தது. அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருந்தது, மேலும் சுற்றிப் பார்த்தல் என்பதைவிட முக்கியமான காரியத்துக்கு பெரும்பாலானவர்கள் வந்திருந்தார்கள். அப்பு எனக்காக அங்கே போகலாம் என்றார். ஆனால், போதுமான வண்டி இல்லை. பேருந்தில் போனால் ஒரு நாள் முடிந்து போகும் திரும்பி வரும்போது. வேண்டாம் பார்ப்போம் என்று நானே சொல்லிவிட்டேன்.

அங்கிருந்த கட்டிட வேலைக்கான கம்பியில் ஏறுவது போட்டி என்று சிலர் ஏறிச் சரிந்தார்கள். நீயும் வாடா என்று ‘சேட்ட’ சாகர் அழைக்கவே இருவரும் போட்டியிடுவதாக ஏறத் தயாரானோம். ஆசீப் வீடியோ எடுத்தான். ஏறியதும் அந்த பக்கம் பார்த்தால், சாகரை காணவில்லை. கீழே இறங்கியதும் வீடியோவை ஆசிப் காட்டும் போதுதான் தெரிந்தது, அவன் ஏறவே இல்லை! ஏறலாம் என்று சொன்னதும் நான் ஏற, அவர் நடுவிரல் காட்டிச் சிரித்துவிட்டு சென்று அமர்ந்து விட்டான். அதே போல பிறகு யதுவை வைத்து முயற்சி செய்தோம், அவரால் ஏறவே முடியவில்லை. கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்ததும் கிளம்பிவிட்டோம். மேலேயே நீர்(தண்ணீர்!) இருக்கவே கழுத்துவரை குடித்திருந்தோம். இறங்குவதும் சிரமமாயிருக்கவில்லை. உடனே வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.

அடுத்து அருகிலிருந்த தூவல் அருவி. சாலை ஊர் முழுவதும் உள்ளது போன்றே ஏற்றமும் இறக்கமுமானது ஆனாலும் தார்ச்சாலையாக இருப்பதால் பராவாயில்லை. ஒரு கட்டத்தில் தார்ச்சாலை முடிந்து மண்சாலை. அங்கும் சில வீடுகள், விவசாயம். இறங்கி நடந்தால் இரண்டே நிமிடம். அருவியின் மேற்பகுதியை நாங்கள் அடைந்திருந்தோம். நீரொழுகிச் சென்று சரிவதை காண இயலும்படி பாறைகள். வெயில் இல்லவே இல்லாத கட்டப்பனை. இந்த நேரம் உச்சியிலிருக்கும் சூரியன் பிற பகுதிகளில். நீர் இருந்தது, பருவத்தில் இருக்கும் அளவுக்கு இல்லை. ஆனால் இங்கே குளிப்பது பாதுகாப்பானது இல்லை வேண்டாம் என்றார் அப்பு. அருவியின் கீழ்பகுதிக்கு சென்றால், நடக்கும் தொலைவில் ஏதோ குகை இருக்கிறதாம். குளிக்கவும் போகாததால் இறங்கவில்லை. ஆனால் வெறொரு இடம் சென்று குளிக்கும் திட்டம் இருந்தது. நரியம்பாறை அருவி. இந்த அளவுக்கு நீர் அங்கும் உண்டு, ஆனால் உயரமிருக்காது என்று சொன்னார். பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

நீரொழுக்கின் மேலாக இருந்த சிறிய மரப்பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்தோம் குரங்குகள் போல! எடுத்தார்கள் என்று சொல்வதே சரி. நான் அவற்றில் இருப்பேனே தவிர நானாக எதுவும் புகைப்படம் எடுக்கவில்லை. இதுவே எடுக்கவேண்டிய இடமாய் இருந்திருந்தால் எவரிடமாவது கைபேசியை பிடுங்கியாவது எடுத்திருப்பேன். கர்நாடகப் பயணத்தில் மாதவனுக்கு கைபேசி அவனுடையது என்பதே மறக்கும்படி நான் பயன்படுத்தியிருந்தேன். ஏன் நீயொரு கைபேசி வாங்கித் தொலைக்கக் கூடாது என்றே வேறு விதத்தில் கேட்டுவிட்டான். சாகர் எங்கிருந்தோ பறித்த கொக்கோ பழத்தை சாப்பிட்டபடி இருந்தான், நானும் கொஞ்சம் பிடுங்கி முதல்முறையாக ருசி பார்த்தேன். கொஞ்சம் புளித்த சீதா பழம் போலிருந்தது.

ஏற்கெனவே குளிப்பதை உத்தேசித்து துண்டு எடுத்து வந்திருந்தோம். ஆனால், நரியம்பாறை போகும் திட்டம் புதியது மற்றும் நகரம் வழியாகப் போகவேண்டியிருந்தது. அப்புவும், ரென்சனும் சென்று தலைக்கவசம் எடுத்து வந்தார்கள். ஜிசன் கேட்டுக்கொள்ளவே வழியில் ஓரிடத்திலிருந்த கரித்துண்டுகளை மூட்டையொன்றில் அள்ளி எடுத்திருந்தோம், அதையும் வைத்துவிட்டு வந்திருந்தார்கள். கோழி சமைக்க நெருப்புக்காக அந்தக் கரி உதவும் என்பது ஜிசனின் வாதம். நரியம்பாறை போகும் பத்து கிலோமீட்டர் உள்ள பயணத்திலேயே எனக்கு முதுகு வலியெடுத்தது. ஆசீப்பிடம் சொன்னேன், போகும்போது நான் நடுவில் உட்காருகிறேன் முடியவில்லை என்று. வண்டியை சாலை முடியும் இடத்தில் நிறுத்திவிட்டு, முக்கியமான பொருட்களெல்லாம் வண்டியில் வைத்துப் பூட்டிவிட்டு நடந்தோம். ஆனால், அப்பு எதிர்பார்த்த அளவுக்கு நீர் இல்லை. ஒழுக்கு என்று இதைத்தான் சொல்ல முடியும், வீழ்ச்சி என்று சொல்ல இன்னும் நீர் வேண்டியிருக்கும். ஆனால் குளிப்பதற்கு இதுவே தாராளம். ஒரு மழை கண்டால் மேலிருந்து கற்களுமே அடித்துவரும் என்றார் அங்கிருந்த ஒருவர். நாங்கள் போன சமயத்தில் இருந்தவர்கள் கிளம்பவும் நாங்கள் குளிப்பதற்கு துண்டு கட்டி இறங்கினோம். அப்பு புகைப்படம் எடுப்பதில் முனைந்திருந்தார். இன்றைக்கு பார்த்தால் தங்கள் புஜம் காட்டி எல்லாரும் எடுத்த புகைப்படங்கள் நூறு கிடக்கிறது. ஒன்றிலும் அருவி முழுமையாய் தெரியவில்லை வேறு என்னென்னவோ தெரிகிறது என்பது என் விசனம். அந்த புகைப்படங்களில் மனிதர் நடுவே செங்கரடி என தணுப்பில் நடுங்கியபடி நின்றிருக்கிறேன்.

அங்கிருந்து ஐஞ்சுருளி சென்றோம் வழியில் தேநீர் குடித்துவிட்டு. நிறைய உள்ளூர் மக்களே சுற்றுலாப்பயணிகள் போல வந்திருந்தார்கள். எரட்டையாறு தேக்கத்திலிருந்து இடுக்கி நீர் தேக்கத்திற்கு நான்கரை கிலோமீட்டர் நீளம் கொண்ட மலைக்குடைவு வழியாக நீர் பாய்கிறது. எழுபதுகளில் இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகு இந்தப் பணியை தொடங்கினார்கள். இருபத்தி இரண்டு பேர் பணியில் இறந்திருக்கிறார்கள். இப்போது நீர் முழங்கால் அளவு ஓடினாலும் மழைக்காலத்தில் முழுவதும் நிறைத்து ஓடும். சாகச விரும்பிகள் உள்ளே கொஞ்ச தூரம் நடக்கிறார்கள். கொஞ்சம் நீர் வேகமெடுத்து வந்தாலும் உயிர் மிஞ்சாது, நீச்சலும் கூச்சலும் உதவாது. சிறிது தூரத்தில் மொத்தமும் இருட்டு. வேடிக்கை பார்த்தல், மீண்டும் புகைப்படம் எடுத்தல். அங்கிருந்த மணற்பரப்பில் உட்கார்ந்து கதை பேசுதல். அடுத்து செய்யப்போகும் முக்கியமான காரியத்துக்கான விவாதம். முடித்துக்கொண்டு கிளம்பினோம். அய்யோ, மீண்டும் பயணமா என்று என் உடல் கதறியது. மாலை நெருங்கவே குளிர் ஏறத்தொடங்கியிருந்ததை உணர்ந்தேன். இரண்டு வண்டியினர் நீரும், நீர்த்துணையும் வாங்கக் கழன்று கொண்டார்கள்.

இந்த பகுதி மக்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது. அவர்கள் காவல் துறையினரை கடந்து வந்திருந்தால் எதிரில் தலைக்கவசம் இல்லாமலோ, மூவராகவோ வருவோருக்கு வண்டியின் விளக்கை குறைத்துக் காட்டி தகவல் தெரிவிக்கிறார்கள். இரண்டு வண்டிகளுக்கு தலைக்கவசம் இல்லை, மேலும் நாங்கள் ஸ்ப்லென்டரில் மூவர் பயணிக்கிறோம். சலிப்பு மிகுதியால் நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒருவர் சொல்லிச் சென்ற பிறகு கவனமாக பார்த்தபடி வந்தேன். ஒரு சாலையில் இடப்பக்கம் திரும்பும் போது எதிரிலேயே காவல்துறை வண்டி! இடப்பக்கம் நின்றிருந்த காரின் பின்னால் நான் ஜிதினை போகச்சொல்லி ஆசீப்பை இறங்கி ஓரமாக ஓடச் சொன்னேன். அருகில் இருந்தது பெண்களின் உள்ளாடை விற்கிற கடை! அதற்கு முன்னால் நின்று கைபேசியை எடுக்க முயற்சித்து இல்லாதது நினைவுக்கு வந்ததும் பர்ஸ் எடுத்து வாடிக்கையாளன்(!) போல ஆசிப் நிற்க வேண்டியிருந்தது. காவலர்கள் பார்த்துவிட்டனர். ஆனால் நல்ல வேலையாக, எங்கள் இருவரை மட்டும். ஜிதின் ஆசீப்பிடம் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றான். பொறுமையாக நடுத்தெருவில் காவலர்கள் வண்டியை நிறுத்தி அபராதம் விதித்துவிட்டு நகர்ந்தார்கள். எங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அழைத்து தகவலைச் சொன்னோம். அவர்களுக்கும் எவரோ எதிரில் வந்தவர் சைகை காட்டிருந்தார். எனவே அவர்கள் பாதுகாப்பாக வண்டியை நிறுத்திவிட்டு காவலர்கள் கடக்கும் வரை திரும்பி நடந்திருக்கிறார்கள்.

எழுகும்வயல் வந்ததும் ஒரு கடையின் பெஞ்சில் உட்கார்ந்து நடந்ததை நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தோம். ஆசிப்புக்கு தன் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒரு கடையில் சென்று கோழி சொல்லிவிட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தோம். எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தபோது இருட்டத் தொடங்கிவிட்டது. அவர்கள் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்துவிட்டு கீழிறங்கி காட்டுக்குள் இடத்தை சுத்தப்படுத்தி தயார் செய்தோம். ஜிசன், ரஞ்சித் மற்றும் யது கோழியை தயார் செய்தார்கள்.

ரென்சன் குடும்பத்தாரின் கைவிடப்பட்ட தறவாட்டின் மிச்சம் அந்த உடைந்த கட்டிடம். உதிர்ந்த கட்டிடத்தின் உள்ளும் புரமும் சூழ்ந்த செடிகளும் கொடிகளும். கூரை இல்லை. ஒரு அறையை தேர்வு செய்து எல்லாவற்றையும் அப்பு வெட்டி வீழ்த்த, ஆசிப்பும் நானும் உதவி செய்தோம். சுத்தம் செய்து முடிக்கும் வரையில் எறும்புகள் ஊர்ந்தபடி இருந்தது. முற்றிலும் இருட்டியிருந்தது இறங்கியபோதே. மேல சென்று அவர்களை அழைத்துக் கொண்டு, பொருட்களையும் எடுத்துவர நானும் ஆசிப்பும் போனோம். சரியாக வழி தவறிவிட்டோம். திரும்பி வந்து மீண்டும் சரியாக மேலே சென்று வீட்டை அடைந்தபோது அவர்களும் தயாராக இருந்தார்கள். ஒவ்வொன்றாய் கீழே சரிந்துவிடாமல் இருக்க பத்திரமாய் டார்ச் அடித்துக் கொண்டு இறங்கினோம். சில இடங்களில் ஒரு அடி வைக்காமல் விட்டாலும் கீழே பத்தடிக்கு சரிந்திருப்போம். ஆனால் புதருக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. பாம்புகள் இல்லை இந்த பகுதியில் என்று அப்பு என் ஐயத்தை போக்கினார். சில சமயம் காட்டுப் பன்றிகள் மட்டும் வரக்கூடுமாம்.

நெருப்பு பற்ற வைப்பதில் மட்டுமே நிறைய நேரம் செலவானது. எனக்கு ஊதுகுழலோடும், விறகடுப்போடும் அனுபவம் உண்டு என்பதால் ஒரு செய்தித்தாளை மடித்து ஊதுகுழல் ஆக்கி, விறகுகளை சரியாக அடுக்கினேன். அந்த நெருப்பில் கோழிளை மாட்டி வேகவைத்ததால் நடுவில் இருந்த கோழிகள் நன்றாக வெந்தன. ஆனால் ஜிசன் எடுத்துவந்த கரியைக் கொட்டியதும் புகைச்சலும் எரிச்சலுமாக ஆனது. கோழிகள் வெந்து கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. ஓரத்தில் இருந்த இரண்டு கோழிகளும் சுத்தமாக வேகவில்லை என்பதை சொல்லிக் கொண்டே இருந்தேன். அவ்வப்போது கரி போட்டு விசிறிக் கொண்டேயிருந்தான் ஜிசன். இடையிலிருந்த கோழிகளில் ஒன்று வெந்து உடைந்து விழும் போலானது. அவற்றை திருப்பவும், நகர்த்தவும் ஆன முயற்சியில் ஜிசன் கிட்டத்தட்ட கையையும் வேகவைத்தான். ஒரு சாக்கில் கொண்டுவந்த தேங்காய் ஓடுகளை அங்கங்கே நான் இட்டுக் கொண்டே இருந்தேன், ஜிசன் நகரும் போதெல்லாம். இல்லையெனில் சுத்தமாக எதுவும் வேகாது என்று தெரிந்திருந்தது, நினைத்தது போலவே கடையிரண்டு கோழிகளில் பெரும்பகுதி மிச்சமானது. இறக்கிய முதல் கோழியிலிருந்தே நான் சாப்பிடத் தொடங்கினேன். வாங்கி வந்த ஈரலை இலைகளில் சில சுற்றுகள் சுற்றி அதையும் நெருப்பிலிட்டார்கள். வெந்திருந்த பாதி கோழியை மேலே சென்று நானும் ஆசிப்பும் ரென்சனின் வீட்டில் கொடுத்து வந்தோம். நீரெற்றுபவர்கள் ஏற்றத் தொடங்கினார்கள்.

ரென்சனின் வீட்டில் எல்லாருக்கும் வேகவைத்து மசித்த மரவள்ளிக் கிழங்கு செய்திருந்தார்கள். எங்களுக்கென தனியாக ஒரு குப்பி ஸ்ரைட் வாங்கி வரச் சொல்லியிருந்தேன், அவர்கள் நீரேற்றும்போது நாங்கள் வெறுமனே எப்படியிருப்பது. அந்த கோழியை ஜீரணிக்க அது பயன்பட்டது. எல்லாரும் கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டோம். இரண்டு மணிநேரம் எடுத்திருப்பார்கள். அதன் பிறகு தான் பாடல்கள் தொடங்கியது, முதலில் நாராசமாகவே இருந்தாலும் போகப்போக நிஜமாகவே நல்ல பாடல்களை பாடினார்கள். பதினோரு மணிக்கு மேலாகவே ரென்சனின் அப்பா இறங்கி வந்தார். எல்லாம் அவர் வந்ததும் தெரியாமல் பாடிக் கொண்டிருந்தார்கள். நானும், ஆசிப்பும் எல்லாரையும் நிறுத்தச் சொன்னோம். ரென்சன் அப்பாவின் பின்னாலேயே ஓடி வந்தான். அவர் நேரமாகிவிட்டது போய்த் தூங்குங்கள் என்றார். அவரை நாங்கள் அனுப்பிவிட்டு, எல்லாரையும் கிளப்பப் பார்த்தோம். எவரும் நகர்வதாக இல்லை. எல்லாவற்றையும் நீ வீடியோ எடுத்தே ஆகவேண்டும் என்று சொல்லி ஆசிப்பை ஒரு மணிநேரமாவது பதிவு செய்ய வைத்திருப்பார்கள். ஒருவரையும் விடாமல் பதிவு செய் என்று அவ்வப்போது சொன்னான் ஜிசன். அத்தனை அமைதியான மனிதனான யதுவே தொடங்கினான், குடிக்காதவர்கள் மிச்சம் வைக்காமல் உணவை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று. ஜிசன் என்னை உட்கார வைத்துவிட்டான். ஆசிப் வீடியோ எடுத்ததால் தப்பிவிட்டான். ஒரு தட்டில் கப்பையும், கொச்சம் கோழியும் கூடவே வேகவைத்த ஈரலையும் வைத்து இதை நீ சாப்பிட்டே ஆகவேண்டும் என்றான். யோவ், யார் இன்னும் எவ்வளவு சாப்பிட்டாலும் உணவு முழுவதும் முடிய ஒரு மணிநேரம் ஆகும் என்று நினைத்தேன். வேறு வழியில்லை நகரமுடியாது, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதாக பாவனை செய்து கொண்டிருந்தேன். எப்படியோ அங்கிருந்து சிறிது நேரத்தில் நகர்ந்தேன்.

ரென்சனும் நானும் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்துவிட்டு மீதமான கப்பையைம், எழும்புத் துண்டுகளையும் ஒரு சிறிய குழி தோண்டிப் புதைத்தோம். எல்லாரையும் எழுப்பிக் கூட்டிக் கொண்டு மேலே போனோம். எல்லாம் அவ்வப்போது கால் சறுக்கியபடி இருந்தார்கள். மேலே சென்றும் சாலையிலேயே வண்டிகளின் மேல் உட்கார்ந்து கொண்டார்கள். எவரையும் தூங்க விடமாட்டார்கள் என்று நான் நினைத்தபடியே நடந்தது. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ரென்சன் உள்ளிருந்து வந்ததை சாக்காக வைத்து உள்ளே போய் பாய் போடுகிறோம் என்று சொல்லி ஓடிவந்து விழுந்தேன். குளிர் தாங்க முடியாமல் ஆகியிருந்தது ஒரு மணிக்கெல்லாம். உடனே தூங்கிவிட்டேன்.

ஆறு மணிக்கு எழுந்தாலும் குளிர் காரணமாக மீண்டும் தூங்கினேன். ஏழு மணிக்கு எல்லாரும் எழுந்திருந்தார்கள். வெறுமனே பல் விலக்கிவிட்டு அந்த குளிருக்கு அவசியமான கடுங்காபி குடித்தோம். ரென்சன் மட்டுமே விடியலிலேயே குளித்துவிட்டு பள்ளிக்கு சென்று வந்திருந்தான். நாங்கள் எவரும் குளிரில் குளிக்கவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் உணவு தயாராகி இருந்தது சோறும் குளம்பும். கூடவே சேப்பங்கிழங்கு வேகவைத்திருந்தார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாயை நசுக்கிப் பிழிந்த சாறு. கொஞ்சமாக கிழங்கும், சோறும் உண்டுவிட்டு எழுந்தேன். ஒரு ஆட்டோ பேசியிருந்தார்கள். கூடவே ஜிதினின் வண்டியில் நாங்கள். கிளம்பும் போது அவர்கள் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எழுகும்வயலிலிருந்து கட்டப்பனை உள்ளூர் பேருந்தில் சென்றோம். ஆசிப் கொஞ்சம் வயிற்று வலி அவ்வப்போது வந்து போவதால் வீட்டுக்கு போக என்னினான், மாவேலிக்கரையில் வீடு. எர்ணாகுளம் வண்டியில் நாங்கள் ஏறவும் அடுத்து வரவிருந்த வண்டியில் நேரே மாவேலிக்கரை சென்று சேர்வான். பேருந்தின் கடைசி இருக்கையில் ஜன்னலோரம் நான் அமர்ந்து கொண்டேன். எனக்கு அடுத்து ரென்சனும் யதுவும். முன்னிருக்கையில் மற்றவர்கள். சிக்கலான பாதை வழியாக மலை இறங்கும்போது தெரிந்தது எப்படி பயணித்து வந்து சேர்ந்திருப்போம் என்று. ரென்சன் முக்கியமான இடங்களை கடக்கும் போதெல்லாம் விவரித்தபடி வந்தான். ரப்பர் ஷீட்டுகளும், நீர் மின் நிலையம் தொடங்கி யானை இறங்கும் இடம், மழைக்காலத்தில் நீர் வீழ்ச்சியாக மாறும் பாறைகள் என ஒவ்வொன்றும் விளக்கினான்.

இறங்குவதற்கே இரண்டு மணிநேரம் எடுத்திருக்கும். ஒரு வழிப்பாதை போன்ற மெல்லிய சாலை. கீழே இறங்கியதும் வெயில் வேர்வை என்பதையெல்லாம் உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் ஒரு கட்டத்தில் வழியிலேயே அணிந்திருந்த ஸ்வெட்டரை கழட்டியிருந்தேன். அங்கிருந்து இரண்டு மணிநேரத்தில் எர்ணாகுளம். பாலாரிவட்டம் வழியாகவே பேருந்துகள் செல்லும் என்பதால் வசதி, இறங்கிக் கொண்டோம். உடல் சோர்வின் உச்சத்தின் இருந்தது. எவரும் எதுவும் பேசவில்லை. ஜிசன் மிகவும் களைத்துப் போயிருந்தான். இதற்கு மேல் மதிய உணவு ஏன் சாப்பிட வேண்டும் என்று தேநீரும் ஆளுக்கு இரண்டு கடிகளும் சாப்பிட்டோம். வெப்பத்தில் நிறைய நீர் குடிக்கத் தோன்றியது. எப்போது அடுத்த பயணம் செல்வோம் என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஏதோ புரியாத பாஷையில் பேசுபவனைப் பார்ப்பது போல உற்றுப் பார்த்தார்கள். இறுதியில் ஒரு வெடிச் சிரிப்பு.

– நாகபிரகாஷ்
17-ஜனவரி-18

அனுபவம்

என்ன, நான் சொல்வது ?

இருக்கிறது ..
வாயைத் திறக்குமுன்னே
இல்லவே இல்லை என்கிறது மறுப்பு
முடித்துவிடலாம்..
நம்பிக்கை துளிர்க்கையில்
நம்மால் முடியாது எனும் அவநம்பிக்கை
நடுவிலே எழுகிறது முட்புதராய்
நடுங்காதே நல்லதே நடக்கும் ..
தேற்றுவதற்குள்
தேறாது ஒன்றும் பேராது என
வேறாக விஷயத்தைச் சித்தரிக்கும்
போறாத வேளையில் பிறப்பெடுத்து
சேறாகக் குழப்பும் ஜீவன்கள்
எதிர்ச்சொல்லுக்கும் மறுப்புக்கும்
அவநம்பிக்கைக்கும் அவதூறுக்கும்
அவ்வப்போது அதிர்ந்துகொண்டிருந்தால்
ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டாமா
மனிதனின் உளறலை புலம்பலைப்
பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டு
கன்னத்தில் கைவைத்தா நிற்கிறது
காலம் ?

-ஏகாந்தன்

புனைவுகள்

Aravindan Neelakandan: Why Vairamuthu Gets It Wrong About Aandal - some notes

If you have not read this excellent and erudite rebuttal of Vairamuthu (=this yet-another-know-it-all-from-Tamil-filmi-‘cult’ural-scene) so far – please go read it first. 296 more words

அனுபவம்

’சொல்வனம்’ சிறுகதை : நிஜமாக ஒரு உலகம்

’சொல்வனம்’ இணையப் பத்திரிக்கையின் நடப்பு இதழில்
(இதழ் 182, 26 டிசெம்பர், 2017) எனது சிறுகதை
‘நிஜமாக ஒரு உலகம்’ வெளிவந்துள்ளது.
அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.

லிங்க்: https://solvanam.com/?p=51152

நன்றி: ’சொல்வனம்’

**

புனைவுகள்

கந்தர்வன் சிறுகதை ’மைதானத்து மரங்கள்’

எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய குறிப்பை முந்தைய பதிவில் பார்த்தோம். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘மைதானத்து மரங்கள்’ கதைபற்றிக் கீழே பார்ப்போம்:

சிறுவயதிலிருந்தே, தன் வீட்டருகே இருந்த பெரிய மைதானத்தையும், அதனைச் சூழ்ந்திருந்த அடர்மரங்களையும் பார்த்து வளர்ந்தவனின் கதை.

புனைவுகள்

நட்பெனப்படுவது யாதெனில்

நல்ல துவக்கமாக அமைந்திருக்கிறது இப்புத்தாண்டு.

விருதுநகர் சென்று வெயிலானைச் சந்தித்தேன்.  பகல் பொழுது, அவரது அலுவலகத்தில். நான் சென்றதும் தொழில் நிமித்தமாகத்தான். என்றாலும் கேலியும் கிண்டலுமாகக் கழிந்தது பொழுது.

வெயிலான் போன்றொருவருடன் நட்பு பாராட்டுவது மிக எளிது.

அனுபவம்

ஸ்டார் வார்ஸ் அனுபவங்கள் #1

ஆரம்பம்:
கருந்தேள் ராஜேஷ் ஸ்டார் வார்ஸ் franchiseஐ லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போல இதை அணுகவில்லை அல்லது அவரைக் கவரவில்லை போலும். அவர் போக செங்கோவி, சுரேஷ் கண்ணன் என இன்னபிற இணைய சினிமா விமர்சக எழுத்தாளர்கள் எழுதிய ஸ்டார் வார்ஸ் பற்றிய கட்டுரைகள் பதிவுகள் அகப்படவில்லை. 14 more words

அனுபவம்