Tags » எஸ் ராமகிருஷ்ணன்

அவளை “வேசை” அல்லது “வேசி” என அழைப்பதா?

அவளை “வேசை” அல்லது “வேசி” என அழைப்பதா?

அல்லது எப்படி அழைப்பது?
எஸ்.ராமகிருஷ்ணன் நல்ல ஜனரஞ்சக எழுத்தாளர் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக அவர் தேசாந்திரியாக சுற்றிய அனுபவத்தை வாசிப்பதும் மற்றும் இப் பயணங்களைப்பற்றி மட்டுமல்ல பிரபல்யாமான நாவல்களையும் அதன் படைப்பாளர்கள் தொடர்பாகவும் உரையாற்றுவதைக் கேட்பதும் இனிமையானது.. அதுவும் குறிப்பாக படைப்பாளர்களின் பெண் துணைகளைப் பற்றி அல்லது படைப்புகளில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றி மிக மிக அழகாக உணர்வு தழும்ப உரையாற்றுவார். அண்மையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஜென்னி ஆகியோரின் வாழ்க்கை பற்றி பல தகவல்களை கூறி அருமையாக உரையாற்றியிருந்தார். இவர் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் இந்த எழுத்துகளும் உரைகளும் பலரை வாசிக்கத் தூண்டுவன என்றால் மிகையல்ல. ஆகவே வரவேற்கப்பட வேண்டியவையே. ஏனெனில் சிலர் எவ்வளவுதான் முற்போக்காளராக இருப்பினும் அவர்களது உரைகளை கேட்கவே சகியாது. இதேபோல பலருது எழுத்துகள் (எனது எழுத்துக்களைப் போல) வறட்சியானது. தொடர்ச்சியாக வாசிக்கவே முடியாது. அந்தவகையில் இவ்வாறான ஒருவர் ஆகக் குறைந்தது நல்ல நூல்களையும் படைப்பாளர்களையும் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றாரே எனத் திருப்திகொள்ளலாம் அல்லவா?

அண்மையில் அவர் இலங்கை வந்தபோது நண்பர்களுடன் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இது ஒரு உரையாடலாகவே நடைபெற்றது. ஆகவே தயக்கமில்லாமல் கேள்விகளைக் கேட்கக்கூடியதாக இருந்தது. ஆகவே ஒரு கேள்வியைக் கேட்டேன். மேற்குறிப்பிட்ட உரைகளை கேட்கும் பொழுதோ அல்லது சில கட்டுரைகளை வாசிக்கும் பொழுதோ (கவனிக்கவும் படைப்புகளைக் குறிக்கவில்லை) அவர் “வேசி” “வேசை” என்ற சொற்களை அப்படியே பயன்படுத்துவார். இதைக் கேட்டவுடன் வாசிக்கும் அல்லது கேட்கும் எங்களுக்கு ஒரு தடை வந்துவிடும். ஆர்வமாக கேட்டுக் கொண்டோ வாசித்துக் கொண்டோ செல்லும் பொழுது தடங்கள் ஏற்படுத்திவிடும். பெண்களை ஒரு பக்கம் மதித்ததும் புகழ்ந்தும் உரையாற்றிக்கொண்டு மறுபக்கம் ஏன்  நீங்கள் இப்படியான ஆண் மைய சொற்களைப் பயன்படுத்துகின்றீர்கள் என அவரிடம் கேட்டேன். இக் கேள்வியை நீண்ட காலமாக எழுதியோ நேரடியாகவோ கேட்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் நடைபெற்றதில்லை. இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு சந்திப்புக்கு அழைத்த கருணாகரன் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது பதிலில் இச் சொல்லை தான் பைபிலிருந்து எடுத்ததாகவும் அது தவறான சொல் இல்லை எனவும் குறிப்பிட்டார். ஏனெனில் இத் தொழில் செய்கின்றவர்கள் தம்மை “வேசி” என்றே நடு வீதிகளில் நிற்கும் பொழுது பொலிசார் விசாரித்தால் கூறுகின்றார்கள். அவர்களே தம்மை அவ்வாறு அழைக்கும் பொழுது நான் அழைப்பது எவ்வாறு தவறாகும் என்றார். அதற்கு நான் அவர்கள் அறியாமையில் அந்த சொற்களைப் பயன்படுத்தினால் உங்களபை் போன்றவர்கள் தானே திருத்தி சரியானதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றேன். உதாரணமாகப் பாலியல் தொழிலாளர்கள் என்பதைப் பயன்படுத்தலாமே என்றேன். அதற்கு அவர் இச் சொல் மேற்குலகப் பெண்கள் பயன்படுத்தும் சொல். மேலும் அவர்கள் இதை ஒரு தொழிலாகச் செய்யவில்லை. தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள் அவர்களுக்கு இல்லை. இவ்வாறன சூழலில் பாலியல் தொழிலாளர்கள் எனப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என்றார்.

நாம் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பான்மையானவை ஆண் மைய சொற்களே. பெரும்பாலான ஆண்களும் ஆண்மைய அதிகார நிறுவனங்களுமே இச் சொற்களை உருவாக்கியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே நாம் பயன்படுத்தும் சொற்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருப்பது அவசியமல்லவா? இச் சொற்கள் தொடர்பாக பல தடவைகள் பலருது எழுதுக்களில் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். சிலர் மட்டுமே தவறு என ஏற்றுக் கொண்டு மாற்றிவிடுவார்கள். பலர் அதை நியாயப்படுத்த பல காரணங்களைக் கூறுவார்கள். நாம் பிரக்ஞையின்மையாக பல ஆண்மைய சொற்களைப் பயன்படுத்துகின்றோம் என்பதை அறியாமலே இருக்கின்றோம் என்பது தூர்பாக்கியமானது. இச் சொற்கள் பலரை குறிப்பாக பெண்களைப் பாதிக்கின்றது. அவமரியாதை செய்கின்றது. இகழ்கின்றது. ஆகவேதான் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. பிரக்ஞையுடன் பயன்படுத்தும் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

மேலும் பாலியல் தொழிலாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ இத் தொழிலை செய்கின்றார்கள். இது ஒரு சமூக நிர்ப்பந்தம். இருப்பினும் சமூகத்தில் முக்கியமான தொழிலாக இது இருக்கின்றது. இதற்கான சமூக சட்ட அங்கிகாரம் இல்லை என்பதற்காக இது தொழில் இல்லை என ஆகிவிடாது. மேலும் மற்றவர்கள் தமது கை கால் மற்றும் வேறு உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி வேலை செய்யும் பொழுது இவர்கள் தமது பாலியலுறுப்புகளைப் பயன்படுத்தி வேலை செய்கின்றார்கள். நமது நம்பிக்கைகளும் பண்பாடுகளும் கலாசாரங்களுமே இச் செயற்பாட்டை தொழிலாகப் பார்க்கத் தடையாக உள்ளது. மேலும் சமூகத்தில் பாலியல் உணர்வுகள் ஒடுக்கப்பட்டதன் விளைவும் ஒருதார மண முறை நடைமுறையில் இருப்பதுவுமே இத் தொழில் உருவானதற்கான காரணம் எனலாம். இந்த மூலப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் பொழுது சில நேரங்களில் இத் தொழிலுக்கான அவசியம் இல்லாமல் போகலாம். அதுவரை அவர்கள் எவ்வாறு அழைப்பது? மதிப்பது? இது தொடர்பாக எழுதிய கட்டுரையை வாசிக்க இங்கு அழுத்தவும்.

இறுதியாக ராமகிருஷ்ணன் அவர்கள் முதலில் இத் தொழிலை செய்பவர்கள் தம்மை “வேசி” “வேசை” என அழைக்காதீர்கள் எனக் கூறவேண்டும். மேலும் தங்களைப் பாலியல் தொழிலாளர்கள் என அழையுங்கள் என அவர்களே கூறவேண்டும். அதன் பின் நான் மாற்றிக் கொள்வதுடன் அவ்வாறு அழைக்க மாட்டேன் எனக் கூறினார்.

ஆகவே இவ்வாறன ஆண் மைய சொற்களை நமது பாவனையிலிருந்து நீக்க வேண்டும் என விரும்புகி்ன்றவர்கள் தாம் அறிந்த பாலியல் தொழிலாளர்களிடம் கேளுங்கள். தங்களை எவ்வாறு அழைப்பது அவர்களுக்கு மரியாதையாக இருக்கும் என கேளுங்கள். பெரும்பான்மையானவர்கள் என்ன கூறுகின்றார்கள்ளோ அதை நாம் அறிவிப்போம். அதன்பின் ராமகிருஷ்ணன் அவர்களும் இவ்வாறான ஆண் மைய சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டு புதிய சொற்களைப் பயன்படுத்துவார்கள் என நம்புவோமாக!

மீராபாரதி

படங்கள் முகநூல் – நன்றி

கரிசல் இலக்கிய மன்னன் கி.ரா.வுக்கு விருது

தமிழில், கரிசல்காட்டு இலக்கியத்தின் முடிசூடா மன்னர் எனக் கருதப்படுபவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய தளத்தில் ஆரவாரமின்றி இயங்கி வரும் மதிப்புக்குரிய ஆளுமை. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கென கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு `இயல்` விருதினை இவருக்கு இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்த கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. கிராமத்துக்காரர். தேர்ந்த கதை சொல்லியும் கூட. அவருக்கு வாய்த்த கிராம வாழ்வே அவரின் சுற்றுச்சூழலான கரிசல் நிலத்து வாழ்வின் பல்வேறு அம்சங்களை எழுத்துப்படம் பிடிக்கவைத்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரது படைப்புகள், அந்தப் பகுதியில் மனிதவாழ்வின் போராட்டம், இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என வாழ்வின் தவிர்க்கமுடியா படிகளை எழுத்து வடிவில் பிரதிபலித்தன. கரிசல் நிலத்தின் வெட்ட வெளி, வறுத்தெடுக்கும் வெயில், வேர்வையில் மின்னும் விவசாயிகள், வேப்பமரக் கிராமங்கள் என விதவிதமாகத் தெரியும் ஒரு காலகட்டத்தின் தமிழ்ப்பிரதேசத்தின் மறக்க முடியாக் காட்சிகள் அவரது எழுத்தில் பிரகாசம் அடைகின்றன.

1958ல் சரஸ்வதி இலக்கிய இதழில்தான் இவரது சிறுகதை வெளிஉலகப் பிரவேசம் செய்தது. அதற்குப்பின் ஏகப்பட்ட சிறுகதைகளை எழுதினார் கி.ரா. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த இவரது நாவல் `கோபல்லபுரத்து மக்கள்` 1991-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. புகழ்பெற்ற பெங்குயின் பதிப்பகம் (Penguin) இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது. கதவு, கோமதி, கன்னிமை, காலம் காலம், இல்லாள், தமிள் படிச்ச அளகு, தேள்விஷம், நாற்காலி போன்ற இவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. இவற்றில் சில நாட்டுவழக்கோடு நகைச்சுவையும் கொண்டவை. குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார் கி.ரா. பெரிசுகளுக்காக அவர் எழுதிய `மறைவாய்ச் சொன்ன கதைகள்` தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழின் முதல் வட்டார சொல்வழக்கு அகராதியைப் தொகுத்தவர். நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்கிற நூலையும் எழுதியுள்ளார் கி.ரா.

‘கதைசொல்லியாக அவரே எனது ஆசான், தமிழ் இலக்கியத்தில் கரிசலின் குரலை உயர்த்திப் பிடித்த அவரே தமிழின் உன்னதக் கதைஞன்’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர் சுந்தரராமசாமி, கி.ரா.வின் கதைகளில் ரஷ்ய எழுத்தாளர் ஆன்ட்டன் செகாவின்(Anton Chekhov) சாயல் இருப்பதாகச் சொன்னார். `அதைப் படித்தபின்தான் நான் செகாவின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்` என்கிறார் கி.ரா.!

கி.ரா.வை 2012 அக்டோபரில் புதுடெல்லியில் பார்த்திருக்கிறேன். தில்லித் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தாளராக வந்திருந்த கி.ரா. தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தார். காங்கோவில் இந்திய தூதரகப்பணியில் இருந்த நான் விடுப்பில் இந்தியா வந்து டெல்லி-முனிர்க்காவில், சகோதரரின் வீட்டில் தங்கியிருந்தேன். எனது மைத்துனி ஒரு இலக்கிய வாசகர். ரசிகர். அவருடன் மாலையில் தமிழ்நாடு ஹவுஸ் சென்று கி.ரா.வை சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

95 வயதான கி.ரா. பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கிறார்.

**

கட்டுரை