Tags » நிகழ்வுகள்

என் முதல் மாரத்தான் ஓட்டம்

முகநூல் நண்பர்களில் நிறைய மாரத்தான் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது மாரத்தான் ஓடிவிட்டுப் போடும் பதிவைப் படிக்கும் போதெல்லாம் நாமும் முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை வந்ததுண்டு. பள்ளிப் பருவத்தில் ஏதோ அப்படியும் இப்படியும் ஓடி சில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதோடு சரி. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேல் ஓட்டத்தை விட்டு வெகுதூரம் ஓடியிருந்தேன். இப்பொழுது மீண்டும் ஓடுவது என்பது அவ்வளவு எளிதாக வந்துவிடாது. இருந்தாலும் ஏதாவது ஒரு மாரத்தானில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.

அப்பொழுதுதான் கோயம்புத்தூர் மாரத்தானும் , கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷனும் இணைந்து அக்டோபர் 1-ஆம் தேதி மாரத்தான் போட்டி நடத்துகிறார்கள் என்ற செய்தி வேலை செய்யும் நிறுவனத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது. நல்ல நோக்கத்திற்காக நடக்கும் மாரத்தான்.வேறு எதுவும் யோசிக்கவில்லை. உடனே முன்பதிவு செய்துவிட்டேன்.மாரத்தானுக்கு 1.5 மாத இடைவெளி இருப்பதால் எப்படியும் தினமும் கொஞ்சம் ஓடி ஓடி பயிற்சி செய்து முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.

தினமும் காலையில் சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மட்டும் முடிந்தவரை செய்துகொண்டு வந்ததோடு சரி. இனிமேல் தான் ஓடிப்பார்க்க வேண்டும் என்ற நிலை. நமக்கு ஏழரை என்பது எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருக்கும் என்பதால் முன்பதிவு செய்த மூன்றாவது நாளே காய்ச்சல் விட்டுவிட்டு வந்து கை ,கால்களில் ஒருவிதமான வலி ஏற்பட்டது.சுமார் பத்து நாட்கள் எந்தப் பயிற்சியும் இல்லை. பிறகு ஓரளவு முயற்சித்து செப்டம்பர் இரண்டாம் வாரம்தான் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை ஆரம்பித்தேன்.

சரவணம்பட்டி KCT கல்லூரிக்கு அருகில் விவேகம் பள்ளியை ஒட்டி ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தார் சாலை ஒன்றுள்ளது. நிறையப் பேர் காலையில் அங்கு நடைப்பயிற்சிக்கு வருவதுண்டு.நானும் அதையே பயன்படுத்திக்கொண்டேன்.பெங்களூரில் நடைப்பயிற்சியின் போது நிறையத் தோழிகள் கிடைத்தார்கள் என்று முன்பொருமுறை கூறியிருந்தேன்.இங்கே அப்படியெல்லாம் இல்லை. தனி ஒருவன்தான். அதுதான் வசதியாகவும் இருந்தது.வெட்டிப்பேச்சு பேசாமல் வந்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாம்.

தினமும் ஒரு மணி நேரம் ஓடியும் , நடந்தும் ஒரு நாளைக்குப் பயிற்சியில் சுமார் 6.5 கிலோமீட்டர் என்ற இலக்கு வைத்து தினமும் இந்த தூரத்தை முடித்த பிறகே பயிற்சி முடியும்.இப்படியாக மூன்று வாரங்கள் ஓடின. பத்துக் கிலோமீட்டர் ஓட்டத்திற்கு பதிவு செய்திருந்தேன். பத்துக் கிலோமீட்டரை 1.5 மணி நேரத்தில் முடிப்பேன் என்று நினைத்திருந்தேன்.

நேற்றைக்குத்தான் மாரத்தான் நடந்தது.காலை நான்கு மணிக்கே மனைவியோடு வீட்டில் இருந்து மாரத்தான் நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டை விட்டுச் செல்லும்போது அம்மா குலசாமியைக் கும்பிட்டுவிட்டு ஓடச்சொன்னார்கள். முதலில் வரவேண்டும் என்று பேராசைப்பட்டார்கள்.அவர்களுக்கு மாரத்தானைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அரை மாரத்தானில் நிறைய வயதானவர்களைக் காண முடிந்தது. அவர்களைப் பார்த்தபிறகு நம்மாலும் பத்துக் கிலோமீட்டர் ஓடிவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆங்காங்கே வார்ம் அப் செய்கிறோம் என்று பலர் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள் .அரை மாரத்தானை திரு.சைலேந்திர பாபு IPS அவர்கள் காலை ஐந்து மணிக்குத் தொடங்கிவைத்தார்கள். பத்துக்கிலோமீட்டர் ஓட்டத்திற்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்ததால் நானும் சில நிமிடங்கள் டான்ஸ் ஆட வேண்டியிருந்தது. அதை வார்ம் அப் என்கிறார்கள். மனைவி வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தாள்.

பத்துக்கிலோமீட்டர் ஓட்டத்தை சரியாக காலை ஆறு மணிக்கு ஆரம்பித்தார்கள்.சுமார் ஆறாயிரம் பேர் அதில் கலந்திருக்கக்கூடும். சுறுசுறுப்பான நேரம் என்பதால் ஓடுவதற்கு நன்றாகவே இருந்தது. எனக்குப் பக்கத்தில் ஒரு கப்பல் ஏவாரி ஓடிக்கொண்டிருந்தார்.ஓட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே செல் போனை எடுத்து காதில் வைத்தவர் தன்னுடைய கப்பல் ஏவாரத்தை போனிலேயே டைரக்ட் செய்து கொண்டுவந்தார்.அவ்வளவு பெரிய மனிதர் மாரத்தானிற்கு நேரம் ஒதுக்கியது கோயம்புத்தூர் மாரத்தானிற்கு கிடைத்த மரியாதை என்று பக்கத்தில் ஓடிய இன்னொரு நபர் புகழ்ந்துகொண்டே வந்தார்.

சுமார் மூன்று கிலோமீட்டர் தாண்டியவுடன் மூன்று , நான்கு நபர்கள் ஓட முடியாமல் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததால் என்னவோ கொஞ்சம் பயம் வந்தது.

இருந்தாலும் என்னோடு ஓடியவர்கள் உத்வேகத்தோடு ஓடியதால் எனக்கும் சோர்வு ஏற்படாமல் அதிக வேகம் இல்லாமல் மெதுவாகவே ஓடினேன். அவ்வப்போது 50 மீட்டர் தூரம் நடந்து கொண்டு சென்று மீண்டும் ஓட ஆரம்பித்தேன்.இதனால் சோர்வு ஏற்படவில்லை.ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டரிலும் பழச்சாறு , பழங்கள் , தண்ணீர் எல்லாம் கிடைத்தது.

இரண்டு , மூன்று இடங்களில் சில தாத்தாக்கள் என்னை முந்திச் சென்றார்கள்.இந்த முயற்சியில் நான் முதல் படியைத்தான் தாண்டியிருக்கின்றேன் என்பது புரிந்தது.

எங்களோடு ஓடிய சிறுவர்களும் சிறப்பாகவே ஓடினார்கள்.கடைசியில் பத்துக் கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் ஓடி முடித்தேன். முடிக்கும்போது கால் வலி இருந்ததே தவிர சுறுசுறுப்பு குறையவில்லை.அந்த சுறுசுறுப்புத்தான் இந்த வருடத்தில் இன்னும் சில மாரத்தான்களிலும் , இனிமேல் தொடர்ந்து மாரத்தானில் கலந்து கொள்வதற்குத்தேவையான தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

இதில் கலந்து கொள்ள நான் விரும்பியதற்குக் காரணமே முழு தூரத்தையும் ஓடி முடித்து என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுவதற்குத்தான். பத்துக்கிலோமீட்டர் ஓடி முடிக்க 1.5 மணி நேரம் ஆகும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் ; 22 நிமிடங்கள் முன்பாகவே முடித்தது கூடுதல் மகிழ்ச்சி.ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக முடிந்தது முதல் மாரத்தான்.

இந்த மாரத்தான் கொடுத்த தன்னம்பிக்கையால் இந்த மாத இறுதியில் ஒரு மாரத்தானிலும் , அடுத்த மாதம் ஒரு மாரத்தானிலும் கலந்துகொள்ள முடிவு செய்து விட்டேன். வேலைப்பளு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் , நம் உடலை ஓரளவு நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அதைவிட தவிர்க்க முடியாத விஷயம் என்பதால் அதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.

மாரத்தானில் ஓடுகிறீர்களோ இல்லையோ , தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் நண்பர்களே. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சரிதானே.

——கதிர்

நிகழ்வுகள்

அனிதா கொல்லப்பட்டாள்

02-09-2017

அனிதா சம்பந்தப்பட்ட செய்திகளை பத்திரிக்கைகளிலும் , மீடியாக்களிலும் படிக்கும் போது வேதனையாக உள்ளது.எவ்வளவு பெரிய கனவோடும் , லட்சியத்தோடும் அவள் வாழ்ந்திருக்கிறாள் என்பதைப் படிக்கும்போது ஆட்சியாளர்களின் மீது கோபமும் எரிச்சலும் வருகிறது.

இந்த நேரத்தில்தான் நாம் ஜெயலலிதாவை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் இருந்திருந்தால் இதில் வெற்றி பெற்றிருப்பாரா என்பதைவிட மத்திய அரசிற்கு நிச்சயம் சவாலாக இருந்திருப்பார் என்று அடித்துச் சொல்லலாம். தற்போதைய ஆட்சியாளர்கள் சவால் விட…ும் அளவிற்கு இல்லை என்றாலும் குறைந்த பட்ச எதிர்ப்பையாவது காட்டியிருக்கலாம்.இவ்வளவு எம்பிக்களை வைத்துக்கொண்டும் மத்திய சர்க்காரிடம் பயந்து மண்டியிட்டுக்கொண்டு ஊசலாடிக்கொண்டிருக்கிறது மானங்கெட்ட மாநில நிர்வாகம்.

அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் பணமும் , அரசாங்க வேலையும் கொடுத்திருக்கும் முதல்வரை எப்படியும் சரித்திரத்தில் இடம் பிடிக்க வைத்துவிடுவார்கள் பாருங்கள் அவருக்குக் கீழ் இருக்கும் மங்குனிப் பாண்டிகள்.

வீட்டில் கழிவரை இல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே விடுதியில் சேர்ந்து +1,+2 படித்திருக்கிறாள் அனிதா. தலைமுறையின் முதல் பட்டதாரி , மருத்துவராக வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்திருப்பாள்.196+ கட் ஆப் என்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல.தினந்தோறும் லட்சியக் கனவை நினைத்து நினைத்துப் படித்திருப்பாள்.

“நம் கல்வித் தரம் போதாது” என்பதை ஓரளவிற்கு ஒப்புக்கொண்டாலும் , மாற்றம் என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வர வேண்டுமே தவிர இப்படியல்ல.

“நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்கள் , நாடகமாடுகிறீர்கள்” என்பவர்களின் மூக்கில் நச்சென்று நாலு குத்து குத்த வேண்டும் போலிருக்கிறது.

நம்மில் எத்தனை பேர் நாம் ஆசைப்பட்ட வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று கேட்டால் பாதிக்கும் மேல் “நாம் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை ,கிடைத்ததில் சாதித்துக்காட்டுவோம்” என்ற பதில்தான் வரும். ஆக, நம் லட்சியம் நிறைவேரவில்லை என்றால் அதற்கு தற்கொலை ஒரு முடிவல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு மனதைரியத்தோடு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.மாணவர்களுக்கு இதைத்தான் முதலில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து புரிய வைக்க வேண்டும்.

இந்த விஷயத்தைப் போல் , மாநில உரிமைகள் எல்லாவற்றையும் ஜி-யிடம் அடகு வைத்து எங்களையும் , எங்கள் எதிர்கால சந்ததிகளையும் பிச்சை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று மட்டும் மாண்புமிகுக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அவ்வளவுதான்.

——கதிர் .

நிகழ்வுகள்

அன்ஸர் அலிக்கு நன்றிகள்

17-Aug-2017

பெங்களுரில் இருந்து கோவைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. மாதம் ஒரு முறை பெங்களுர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது.அப்படிச் செல்லும்போது நண்பன் ஜெயக்குமார் வீட்டில் தங்கிக்கொள்வேன்.

நேற்றிரவு ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு ஷர்மா ட்ராவல்ஸில் பயணம். பொம்மனஹள்ளி தாண்டியவுடன் நண்பனுக்கு போன் செய்து இறங்கும் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டேன். காலை ஐந்து மணிக்கெல்லாம் மடிவாலாவில் இறக்கி விட்டார் ஓட்டுனர். அங்கிருந்து நடந்து சென்றால் சுமார் பத்து நிமிடத்தில் நண்பன் வீட்டிற்குச் சென்றுவிடலாம். இருந்தாலும் நடந்து சென்றால் நண்பன் வருத்தப்படுவானே என்ற ஒரே காரணத்தால் மட்டுமே நண்பனை வரச்செய்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்பிக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

பேருந்தில் இருந்து இறங்கி நண்பனுக்காக காத்திருக்கும் நேரத்தில் டைம்பாஸுக்காக செல்போனை எடுத்து ஏதாவது பார்ப்போம் என நினைத்து தேடியபோதுதான் அந்த அதிர்ச்சி என் இதயத்தைத் தட்டியது. நண்பனுக்கு போன் செய்த பிறகு செல்போனை அப்படியே மறந்து பேருந்து இருக்கையிலேயே விட்டுவிட்டு இறங்கியது மண்டைக்கு எட்டியது.

மிகவும் விலை உயர்ந்த செல்போன் இல்லை என்றாலும் என் லெவலுக்கு அது சற்று அதிகம்தான். அதுபோக ஜாதகத்தில் முக்கால்வாசி தகவல்கள் செல்போனில்தான் உள்ளன. உஷாராகச் செல்லும்போதே நம் பொருட்களையும் பணத்தையும் அடித்துச் செல்லும் கயவர்கள் வாழும் இந்தக் காலத்தில் “இந்தா சாமி , எடுத்துக்க கண்ணு” என்பதைப் போல் வைத்துவிட்டு வந்தால் மீண்டும் கிடைக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே.

என்னை அழைத்துப்போக வந்த நண்பனிடம் விஷயத்தைச் சொல்ல , இருவரும் பேசி ட்ராவல்ஸ் டிப்போ இருக்கும் கலாசிபாளையம் சென்று அவர்களிடமே கேட்டுப் பார்ப்போம் என்று முடிவெடுத்து இருவரும் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்.

போகும் வழியில் “எதுக்கும் ஒருக்கா உன்னோட நம்பருக்கு போன் செஞ்சு பாரு கதிரு” என்றான் புத்திசாலி நண்பன்.போன் செய்தால் சப்தம் கேட்டு செல்போனை எடுத்து ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டால் என்ன செய்வது என்பதால்தான் அது வரை நானும் அழைக்கவில்லை.

சரி நண்பன் சொல்கின்றானே செய்துதான் பார்ப்போம் என நினைத்து என் நம்பருக்கே போன் செய்தேன். ஐந்து , ஆறு ட்ரிங் , ட்ரிங்குகளுக்குப் பிறகு ஒருவர் போனை எடுத்தார். எனக்கு ஆச்சரியம்.

“ஹலோ ஸார் , நான் அன்ஸர் அலி பேசுகின்றேன் , போன் உங்களோடதுங்களா” என்று அழகிய கொங்குத் தமிழிலேயே பேசினார் அந்த இசுலாமிய சகோதரர். “ஸார் , ஆமாங்க என்னோடதுதான் உங்ககிட்டத்தானே இருக்கு , வச்சிருங்க ஸார் நானே வந்து வாங்கிக்கிறேன்” என்றதும் “பிரச்சனையே இல்ல பயப்படாதீங்க நான் நியூ திப்பசந்திராவில் இருக்கிறேன் , நீங்க எப்ப வேணும்னாலும் வந்து வாங்கிக்கோங்க , பத்திரமா இருக்கு” என்றார்.

அப்படியே வண்டியை திப்பசந்திராவிற்கு விட்டோம். சுமார் 13 கிமீ இருக்கும். அவருடைய வீட்டை அடையும்போது மணி காலை 5:35. அன்ஸர் அலி வீட்டில் இருந்து வெளியில் வந்து எங்களை அழைத்துச் சென்றார். என் செல்போனையும் என்னிடம் கொடுத்தார். நான் காண்பது கனவா நனவா என்று சில நொடிகள் சந்தேகம் இருந்தது.அன்ஸர் அலி தான் திருப்பூரைச் சார்ந்தவர் என்றார்.சில நிமிடங்கள் அவரிடம் பேசியிருந்துவிட்டு அவர் கையைப் பிடித்து பல முறை நன்றி தெரிவித்துவிட்டு விடை பெற்றோம்.

அன்ஸர் எங்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் ஏற்கனவே இரண்டு முறை செல்போனை தொலைத்தவர் என்று வருத்தப்பட்டார். எனக்கு அப்படியில்லை. 14 வருடங்கள் பெங்களூரில் வசித்தபோதுகூட எதையும் இப்படி தொலைத்ததில்லை ; இப்பொழுது பெங்களூருக்கு விருந்தாளியாக வந்தபோது தொலைத்துவிட்டோமே என்று என்மீதே எனக்கு கோபம் வந்தது போன் கிடைக்கும்வரை.

பேருந்தை விட்டு இறங்கி சுமார் ஒரு மணி நேரம் நண்பனையும் பல இடங்களுக்கு அலையவிட்டதில் வருத்தம்தான். இருந்தாலும் அவன் நண்பன் இல்லையா , வருத்தப்பட மாட்டான்.

இந்த உலகம் முழுக்க முழுக்க கயவர்களால் நிறைந்துள்ளது என்பது சரியல்ல.சகோதரர் அன்ஸர் அலியைப் போன்று தங்களால் முடிந்த அளவிற்கு மனிதம் வளர்ப்பவர்களும் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.மிக்க நன்றி சகோதரா.

எந்த பலனையும் எதிர்பார்க்காமல் மனிதம் வளர்ப்போம் மனிதர்களே.

—— கதிர்.

நிகழ்வுகள்

நன்றி பெங்களூரூ

30-May-2017

ஒரே வீட்டில் நீண்ட நாட்கள் வசிப்பவர்களுக்கு வெளியில் எங்கு சென்றாலும் , இரவு எவ்வளவு நேரமானாலும் தங்கள் வீட்டிற்கே வந்து உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். காரணம் ஒரு விதமான உணர்வுதான். அப்பாவை ஊரில் இருந்து சுற்றுலா செல்ல கட்டாயப்படுத்தி நான் அழைத்து வர எனக்கு 37 வருடங்கள் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும் இரவு தன் இடத்திற்கே வந்துவிட வேண்டும் என்று சொல்லுபவர். ஒரு முறை பெங்களூருக்கு எங்களைப் பார்க்க முதல் நாள் மாலையில் வந்துவிட்டு அடுத்த நாள் காலையிலேயே ஊருக்குப் பறந்தவர். நாம் வெகு காலம் வசித்து வந்த நம் வீடு கூட நமக்கு ஒரு கட்டத்தில் செல்லப் பிள்ளையாகிவிடுகிறதுதான். ஒருவர்கூட வீட்டில் இல்லையென்றாலும் நம் வீட்டோடு நமக்குள்ள நீண்ட நாள் உறவானது தனிமை உணர்வைக் கொடுப்பதில்லை.

2003-ல் பொறியியல் படிப்பு முடித்த கையோடு பெங்களூருக்கு வேலை தேடி வந்த அந்த நாள் அப்படியே இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று காலை சில்க் போர்டு வந்து இறங்கி கொட்டும் மழையில் , குளிரில் நடுங்கிக்கொண்டு உறவினர் வீட்டிற்குச் சென்றதும் மறக்கவில்லை. காலம் மாற மாற மழையும் குறைவு , அன்றைக்கு இருந்த குளிரும் அவ்வளவாக இன்றைக்கு இல்லை. நாகரீக வளர்ச்சி மரங்களை அழிப்பதில் ஆரம்பித்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. அன்றைக்கு இருந்த பெங்களூரு வேறு , இன்றைக்கு இருக்கும் பெங்களூரு வேறு.

அண்ணாமலை படத்தில் வரும் ரஜினிகாந்த்தைப் போல் ஒரே பாடலில் பால் கறந்து , வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து , பிறகு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து , கடின உழைப்பால் ஐந்தே ஐந்து நிமிடத்தில் முன்னேறியதைப் போல் எல்லாம் யாரும் இங்கு பெரிய ஆளாக வளர்ந்துவிட முடியாது என்பதால் அவ்வளவாக பில்ட் அப் கொடுத்து நான் இப்படி வந்தேன் , அலைந்தேன் , திரிந்தேன் , சிரமப் பட்டேன் , ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப் பட்டேன் என்றெல்லாம் வசனம் பேச விரும்பவில்லை. சிரமப்பட்டது உண்மை என்றாலும் அந்த சிரமத்தில் அதிகப் பங்கு பெற்றோர்களுடையதுதான். எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் என் படிப்பில் மட்டும் எந்தக் குறையும் எனக்கு அவர்கள் வைக்கவில்லை. அவர்கள் சிந்திய வியர்வைக்கு கிடைத்த வெற்றிதான் இப்போது நான் இருக்கும் இந்த நிலை.பெற்றோர்கள் அருளாலும் , இறைவன் அருளாலும் வாழ்க்கைச் சக்கரம் நல்லபடியாக ஓடுகிறது . அடுத்த ஜென்மத்திலும் அவர்களே அப்பா , அம்மாவாகக் கிடைத்துவிட வேண்டும் என்ற பேராசையும் இல்லாமல் இல்லை.

இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை பலமாகப் போட்டுக்கொடுத்தது இந்த பெங்களூர்தான். 2003 ல் இருந்து என்னுடைய வளர்ச்சிக்கு அனைத்தையும் செய்துகொடுத்தது இந்த ஊர். இதே ஊரில் ஏதோ ஒரு இன்டெர்வியூவில் சந்தித்த ஒரு புதிய நபர் பின் நண்பராக அவர் மூலம் கிடைத்ததுதான் ஐடி துறையில் எனக்கு முதலில் கிடைத்த வேலை. அதற்குப் பின் என் அனைத்து வெற்றிக்கும் முக்கிய காரணம் இந்த பெங்களூர்தான். கல்லூரி படிக்கும் போது முதல் வருடம் கடனை வாங்கிப் படித்ததும் , இரண்டாம் வருடம் அந்தக் கடனை அடைக்க வயலை விற்றதும் , மூன்றாம் வருடம் அப்பா ஆசை ஆசையாக வைத்திருந்த புல்லட்டை விற்றுப் படித்தது என்று நிறைய இழப்புகளோட படித்து முடித்து வந்தவனுக்கு ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்தி அவர் மூலம் ஒரு வேலையைக் கொடுத்து முத்தமிட்டது இந்த பெங்களூர். பெற்றோர்கள் வழிகாட்டினார்கள் என்றால் பெங்களூர் எனக்கு வாழ்க்கையைக் காட்டியது. இந்தப் பத்தியையும் , இந்தப் பதிவின் முதல் புத்தியையும் இப்பொழுது நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் சொல்ல வருவது புரியும்.

பெங்களூருக்கும் எனக்குமான இந்த 14 வருட பந்தத்தில் நல்லது , கெட்டது என்று நிறைய பார்த்தாகிவிட்டது. எல்லாவற்றிலும் கற்றுக்கொள்ள சிறிதளவாவது ஏதாவது இருந்திருக்கும். கற்றுக்கொண்டேன் அதோடு தேவையான அளவிற்கு பெற்றுக்கொண்டேன். இப்படி ஒரே இடத்தில் இத்துனை வருடங்கள் இருந்துவிட்டு திடீரென வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. அவ்வளவு எளிதில் இந்த முடிவை நாங்கள் எடுக்க வில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இதைப் பற்றி நிறையப் பேசினோம். இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு இங்கிருந்து செல்ல முடிவெடுத்தோம். இத்துனை நாட்களாக குழந்தைகளை ஊரில் விட்டுவிட்டு சம்பாதித்தது போதும் என்ற முடிவை எடுக்க அவ்வளவு சிரமமாக எங்களுக்கு இருக்கவில்லை. அப்படி சம்பாதித்துக் கோட்டை கட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

பெங்களூரை விட்டுப் பிரிகின்றோம் என்றாலும் , போகும் இடம் எங்கள் கொங்கு மண் என்பதால் வருத்தத்திலும் சற்று ஆறுதலாக இருக்கிறது. அலுவலகத்தில் ஒவ்வொருவரிடமும் “போய் வருகின்றேன்” என்று சொல்லும்போது உணர்ச்சிவசப்படுகின்றேன். வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு கோயமுத்தூர் வந்து செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் முன்பே இருந்தது என்றாலும் அது நடக்கும் போது பல வருடங்களாக நம்மை வாழ்த்தி , வளர்த்துவிட்ட மண்ணை விட்டுப் போகவும் மனசில்லை. அவ்வப்போது வந்து வளர்த்துவிட்ட மண்ணை முத்தமிட்டுச் சென்றுவிடவேண்டும்.

நாளைக்குத்தான் பெங்களூரில் கடைசி நாள். நாளை பெட்டி படுக்கையோடு ஊருக்குப் புறப்படுகின்றோம். அடுத்த வாரம் இந்நேரம் கோயமுத்தூரில் இதே போல் லேப்டாப்பில் டைப் அடித்துக்கொண்டிருப்பேன். இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தின் கோயமுத்தூர் கிளையில் வரும் திங்களன்று சேர்ந்து வேலையைத் தொடர வேண்டும். பெங்களூரில் தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து சோர்வானவன் கோயமுத்தூரில் அலுவலகத்தில் இருந்து மூன்றே கிலோமீட்டர் பக்கத்திலேயே வீடு பார்த்துவிட்டேன். புதிய இடம் என்பதால் எல்லாம் செட் ஆக சில மாதங்கள் ஆகலாம். ஆகிவிடும்.

மனைவியையும் , குழந்தைகளையும் இனி பிரிக்கப் போவதில்லை. அவர்கள் இனி ஒன்றாகவே இருக்கப் போகிறார்கள். குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த அன்பு முழுமையாக இனி அவர்களுக்குக் கிடைக்கப் போகிறது. ஒரு கணவனாக மனைவிக்கு நான் செய்த முதல் பெரிய விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.

இனி நாம் கோயமுத்தூரில் சந்திப்போம் நண்பர்களே.

—– கதிர்.

நிகழ்வுகள்

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது.

காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

நிகழ்வுகள்

நிகழ்வுகளின் நாட்குறிப்புகள் (Dairy of Events)

ஜனவரி 4   –   உலக பிரெய்லி தினம்

ஜனவரி 9   –   வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas; NRI Day – காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திறங்கிய நாள்)

ஜனவரி 12   –   தேசிய இளைஞர் தினம் (National Youth Day – விவேகானந்தரின் பிறந்த நாள்) 74 more words

நிகழ்வுகள்

கக்கூஸ் ஆவணப்படம் - உரையாடலுக்கான குறிப்பு

இந்த ஆவணப்படத்தினை முன்வைத்து சில விடயங்களை முக்கியமாகக் கவனப்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன்.  இந்த ஆவணப்படமானது இந்தியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழலை) மையமாக வைத்து உரையாடலை முன்வைக்கின்றது.  இதனைப் பார்க்கின்ற நாம் இந்தியச் சூழலில் மலம் அள்ளும் தொழிலாளர் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்கிற புரிதலோடு என்று படம் பார்ப்பதாகக் கடந்துபோய்விடக் கூடாது,  நாம் இவற்றை, இலங்கைச் சூழலிலும், புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற வகையில் கனடியச் சூழலிலும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.