“அவ்யாக்ருத ப்ரும்மணோ கணேசஸ்ய சரீரே,
நாபிர்-பிரும்மா, முகம் விஷ்ணு; நேத்ரம் ருத்ர:
வாமபார்ச்வம் சக்தி; தக்ஷிணம் சூர்ய: ஆத்மா ஸ்மிதா மய:

அதாவது, கணபதியின் நாபி பிரும்மாவாகவும், முகம் விஷ்ணுவாகவும், கண்கள் ருத்திரனாகவும், இடதுபாகம் சக்தியாகவும், வலது பாகம் சூர்யனாகவும் இருப்பதாக மேலே இருக்கும் ஸ்துதி கூறுகிறது. இது காணாபத்தியத்திய வழிபாட்டில் வரும் ஒரு முக்கிய தியான ஸ்லோகம். எல்லா தெய்வங்களும் கணபதியை ஏதோ ஒரு சமயத்தில், ஏதேனும் ஒரு காரணத்திற்காக வணங்கியதாக புராணங்களில் படித்திருக்கலாம். உதாரணத்திற்கு லலிதையின் பண்டாசுர வதத்தில் ஒருநாள் அன்னையின் சக்தி சேனை தோல்வியை சந்திக்கும் நிலை, அம்பாள் அந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததில், பண்டாசுரனது சைன்யத்தில் இருந்த விசுக்ரன் என்பவன் யுத்தகளத்தில் அமைத்த விக்ன யந்தரம் என்று அறிந்து, கணபதியை தொழுது அதை தகர்த்ததாக தெரிகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், “மஹா-கணேச நிர்ப்பின்ன விக்னயந்திர பிரஹர்ஷிதா” என்பது இதைக் குறிக்கும் நாமாவளி. இதே போல் திரிபுர சம்ஹாரத்தின் முன்பாக பரமசிவன் விநாயகரைத் தொழுததாக கணேச புராணத்தில் இருக்கிறது.

விநாயகர் பிரம்மச்சாரி என்பது எல்லோரும் அறிந்தாலும், சில ஆலயங்களில் அவர் ஒரு மனைவியுடனோ அல்லது இரண்டு மனைவியருடனோ காக்ஷி அளிப்பதைப் பார்த்திருக்கலாம். அப்படியானால் அவர் எப்படி பிரம்மச்சாரி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சித்தி-புத்தி விநாயகர் என்ற பெயரில் இரு தேவிகளாக இருப்பது இச்சா சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும், விநாயகரோ பிரம்ம ஸ்வரூபம். ஆக இச்சையும், கிரியையும் வைத்து ஞானத்தால் சிருஷ்டி பரிபாலனம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் ஒடுங்கும் போது இந்த இரு சக்திகளையும் தன்னுள்ளேயே லயப்படுத்திக் கொண்டு ஞானமயமாகிறார்.

உலகில் முதலில் எழுத்துருவை ஏற்படுத்தியவர் விநாயகர்.
மஹாபாரத்தை தனது தந்தம் கொண்டு எழுதியவர். அதனால்தான் இன்றும் பெரியோர் எழுத ஆரம்பிக்கும் முன் பிள்ளையார் சுழியினை போடுகிறார்கள். தற்போதைய குழந்தைகளுக்கு இவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். மஹாபாரத்தை எழுத தனது ஒரு தந்தத்தை இழந்ததால் ஏக தந்தர் என்ற பெயர் பெற்றார்.