Tags » Sri Ramakrishna Paramahamsa

Sri Paramahamsarin Apta Mozi - 121

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 121

[முந்தைய பகுதி – மொழி 120: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/09/sri-paramahamsarin-apta-mozi-120/ ]

தொண்டர்தம் பெருமை

பரமஹம்ஸர் பகர்ந்ததின் கருத்து யாதாயிருக்குமோ என்று மஹேந்திரர் தமக்குள்ளே எண்ணிப் பார்த்தார். ‘இப்பிரபஞ்சம் என்னும் சிறையினுள் இவர்கள் எல்லாரும் அடைபட்டுக் கிடக்கின்றனர் என்கிற கருத்துப்பட பரமஹம்ஸர் பேசினாரா என்ன? அவர்களுடைய பரிதாபகரமான நிலையை முன்னிட்டே பரமஹம்ஸர் இத்தகைய விண்ணப்பத்தை அம்பிகையிடம் தெரிவித்தார்.’

புறவுல உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பரமஹம்ஸருக்கு உண்டாயிற்று. காசிப்பூரிலிருந்து வந்திருந்த நீலமாதவன் என்கின்ற அன்பரும் மற்றொரு பிரம்ம சமாஜத்து அங்கத்தினரும் அவ்வூரிலே அக்காலத்தில் வசித்திருந்த பாவாஹாரி பாபாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரம்ம சமாஜத்து அங்கத்தினர்களில் மற்றொருவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் செய்தி ஒன்று தெரிவித்தார்: “ஐயனே, இவர்கள் இருவரும் காசிப்பூரில் வசித்துவரும் பாவாஹாரி பாபாவை நேரில் சென்று பார்த்து வந்திருக்கிறார்கள். ஆகையினால்தான் இவர்கள் அந்த மஹானைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சான்றோர் திருக்கூட்டத்தில் அவரைப் பணிந்து சேர்த்துவிடலாம்.”

பரமஹம்ஸ தேவர் அடைந்திருந்த பரவசநிலை இன்னும் முற்றிலும் மாறவில்லை. ஆதலால் வாய் திறந்து பேச அவருக்கு இயலவில்லை. இச்செய்தியைக் கேட்டு அவர் வெறுமனே புன்னகை பூத்தார்.

பிரம்ம சமாஜத்து அன்பர் மேலும் பகர்வாராயினர்: ‘அந்த மஹான் தங்களுடைய திருவுருவப் புகைப்படம் ஒன்றைத் தமது அறையில் வைத்திருக்கிறார்’

அதைக் கேட்ட பரமஹம்ஸர் புன்சிரிப்புடன் தமது மேனியைச் சுட்டிக் காட்டி, “இது வெறும் தலையணை உறை போன்றது” என்றார். சிறிது பேச ஆரம்பித்ததும் பரமஹம்ஸருக்குப் புறவுலக உணர்வு முற்றிலும் வந்துவிட்டது. மேலும் அவர் இயம்பினதாவது: “தொண்டர்களுடைய உள்ளம் தெய்வத்துக்கு இருப்பிடம் என்பதை நீ நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயாக. கடவுள் எங்கும் நிறைபொருள் என்பது உண்மை. ஆனால் தொண்டன் ஒருவனுடைய உள்ளத்திலே அவர் சிறப்புற்று வீற்றிருக்கிறார். மிராசுதார் ஒருவருக்கு நிலங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு இடங்களில் அவர் வாழ்ந்திருப்பார். ஆயினும் அவர் பெரிதும் வாழ்ந்திருக்கும் மாளிகை ஒன்று இருக்கும். அந்த மிராசுதார் எங்கே இருக்கிறார் என்று யாராவது கேட்டால் இன்ன இல்லத்தின் முன்மண்டபத்தில் அவரைக் காணலாம் என்று ஏனையோர் இயம்புவார்கள். அதேபாங்கில் எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுள் சிறப்பாக பக்தனுடைய உள்ளத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இக்கடவுளைப் பல பாங்குடைய மக்கள் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஞானிகள் அவரைப் பிரம்மம் என்றும் பகர்கிறார்கள். யோகிகளோ அதே மெய்ப்பொருளை ஆத்மன் என்று அழைக்கின்றனர். இனி, பக்தர்களுக்கிடையில் அவர் பகவான் எனப் பெயர் பெற்று இலங்குகின்றார். மக்களுள் பிராம்மணன் என்று அழைக்கப்படும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன் கோயிலிலே பூஜை பண்ணும்பொழுது அவனுக்கு அர்ச்சகர் என்றோ, பூசாரி என்றோ பெயர் வருகிறது. அதே மனிதன் மடைப்பள்ளியில் அமுது ஆயத்தப்படுத்தும்பொழுது அவனுக்குச் சமையல்காரன் என்னும் பெயர் வந்துவிடுகிறது. ஞானி ஒருவன் கடவுளைக் குறித்து விசார மார்க்கத்தில் செல்லுகிறான். கட்புலனாகும் பொருள்களையெல்லாம் மெய்ப்பொருள் இது அல்ல, இது அல்ல என்று அவன் விசாரித்துத் தள்ளுகிறான். இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டு போகிற ஞானி முடிந்த நிலைக்கு வருகிறான். மெய்ப்பொருளைக் குறித்து என்னென்று பகர்வதென்று அவன் திகைக்கிறான்”

(தொடரும்…)

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி

Sri Ramakrishna Jayanthi-2017-English/Tamil

(Scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – IV)

-Swami Chidbhavananda

(Special article for the rememberance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.) 845 more words

Special Articles

Sri Ramakrishna Jayanthi-2017-English/Tamil

(Scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – III)

-Swami Chidbhavananda

(Special article for the remembrance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.) 527 more words

Special Articles

Sri Ramakrishn Jayanthi-2017-English/Tamil

(scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – II)

-Swami Chidbhavananda

(Special article for the remembrance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.) 784 more words

Special Articles

Sri Ramakrishna Jayanthi-2017-English/Tamil

(scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – I)

– Swami Chidbhavananda.

(Special article for the remembrance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.) 786 more words

Special Articles

Sri Paramahamsarin Apta Mozi - 109

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 109

(முந்தைய பகுதி – மொழி 108: https://swamichidbhavananda.wordpress.com/2016/10/20/sri-paramahamsarin-apta-mozi-108/)

பத்மலோசன் கதை

ஒரு கிராமத்தில் பத்மலோசன் என்னும் இளைஞன் ஒருவன் வசித்திருந்தான். கிராமத்தார்கள் அவனைப் ‘பத்து’ என்று செல்லப்பெயரிட்டு அழைப்பதுண்டு. இந்தக் கிராமத்தின் ஓர் எல்லைப் புறத்தில் பாழடைந்த கோவில் ஒன்றிருந்தது. அதனுள் மூர்த்திப் பிரதிஷ்டை ஒன்றும் யாரும் செய்து வைக்கவில்லை. அக்கோயிலைச் சுற்றிலும் ஆல் முதலிய காட்டுச் செடிகள் முளைத்திருந்தன. பாழடைந்த நிலையில் அக்கட்டடம் இருந்தது. அதனுள் வௌவால்கள் ஏராளமாகக் குடியிருந்தன. அதன் தரையில் தூசியும் வௌவாலின் எச்சமும் நிறைந்து கிடந்தன. ஆதலால் வழிபாட்டுக்காக என்று அக்கோயிலுக்குள் போவார் யாருமில்லை. ஒரு நாள் மாலை சந்தியாவேளையில் அக்கோயிலிலிருந்து சங்கநாதம் தொனிப்பது ஊரார் காதில் விழுந்தது. ஒருவேளை அக்கோயிலினுள் யாரோ மூர்த்திப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்; ஆதலால் அங்கு மாலை  சந்தியா பூஜை நிகழ்கிறது என்று ஊரார் எண்ணினார்கள். உடனே அவர்கள் அக்கோயிலுக்குப் புறப்பட்டு ஓடினார்கள். மூடப்பட்டிருந்த கதவில் ஒன்றை இலேசாக யாரோ ஒருவன் தள்ளித் திறந்தான். உள்ளே ஒரு மூலையில் பத்மலோசன் நின்றுகொண்டிருந்தான். சும்மா அவன் சங்கை ஊதிக்கொண்டிருந்தான். கோயிலினுள்ளே மூர்த்திப் பிரதிஷ்டை ஒன்றையும் யாரும் செய்து வைக்கவில்லை. கோயிலை யாரும் பழுது பார்க்கவும் இல்லை. அழுக்குப் படிந்தபடியே இருந்தது. கதவைத் தள்ளித் திறந்தவன் இங்ஙனம் கத்தினான்: “அட மடையா! ஆலயத்தினுள் தெய்வத்தின் விக்ரஹம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. நீ சும்மா சங்கை ஊதிக் கொண்டிருக்கிறாய். பதினொரு வௌவால்கள் அல்லும் பகலும் இதனுள்ளேயே சுற்றித் திரிகின்றன. கர்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கட்டில் அடங்காத மனதும் தம் போக்கில் உழன்று கொண்டிருக்கின்றன. வெறுமனே கூப்பாடு போடுவதால் குழப்பத்தைப் பெருங்குழப்பமாக்குகின்றாய் நீ.”

உள்ளத்தினுள் கடவுளைப் பிரதிஷ்டை செய்

“பொருளற்ற பாங்கில் கூச்சல் போடாதே. உன் உள்ளத்தினுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. மனத்தைத் தூயதாக்கு. தூய மனதில் தெய்வம் தாமாக எழுந்தருளுகின்றார். வௌவாலின் அழுக்கு நிறைந்துள்ள ஆலயத்துக்குள் உபாசனாமூர்த்தி எதையும் யாரும் கொண்டு வருவதில்லை. அழுக்குப் படிந்த மனதும் அத்தகையதே. முதலில் தெய்வத்தை உன்னுடைய உள்ளத்தினுள் பிரதிஷ்டை பண்ணு. பிறகு பிரசங்கங்களை வேண்டியவாறு செய்.

உள்ளத்தினுள்ளே ஆழ்ந்து மூழ்கு. அது ஆழம் நிறைந்த ஆழ் ஆழி. அதன் கீழ்ப்பகுதியில் விலைமதிக்க முடியாத இரத்தினங்களையும் மணிகளையும் காணலாம். அவைகளைப் பெற்றான பிறகு வேண்டியதை நீ செய்வதற்கு முற்படு. ஆனால் மனத்தகத்து ஆழ்ந்து மூழ்க முயலுவார் யாருமில்லை. பாரமார்த்திகப் பெருவாழ்வு வாழ விரும்புவாரும் இல்லை. யமம் நியமத்தோடு கூடிய நல்வாழ்வு வாழ விரும்புபவர்களும் இல்லை. விவேகமும் வைராக்கியமும் அடையப் பெற்றவர்களைக் காண்பதும் அரிது. உண்மையான ஞான வாழ்க்கை வாழ்பவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால் ஏதோ சில புஸ்தகங்களைப் படித்துவிட்டு மேடைப் பிரசங்கிகளாகத் தோன்றியுள்ளவர்களை வேண்டியவாறு காணலாம். பிறர்க்கு ஞானோபதேசம் செய்வது அவ்வளவு எளிதன்று. மனிதன் முதலில் சுவானுபூதியில் கடவுளைச் சாக்ஷாத்கரிக்க வேண்டும். அதன் பிறகு கடவுளிடத்திருந்து அவன் ஆதேசத்தைப் பெற வேண்டும். கடவுளின் ஆதேசத்தைப் பெற்றவனே பிறர்க்குப் போதிக்க வல்லவன் ஆகின்றான்.”

இங்ஙனம் பகர்ந்துகொண்டு பரமஹம்ஸர் தாம் நின்றுகொண்டிருந்த திண்ணையின் மேற்கு மூலையை எட்டினார். அவருக்கு அருகில் மஹேந்திரரும் நின்றுகொண்டிருந்தார். மஹேந்திரருக்கு இப்பொழுது மனதில் குழப்பம் ஒன்று உண்டாயிற்று. விவேகம், வைராக்கியம் என்பன பெண் ஆசை, பொன் ஆசை ஆகியவைகளைத் துறந்துவிடுதல் எனப் பொருள்படுகின்றன. அத்தகைய ஆசைகளை ஒழித்தாலன்றி ஞான வாழ்க்கையில் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை என்று பரமஹம்ஸர் பல தடவை வற்புறுத்திச் சொல்லியுள்ளார். ஆனால் தம் நிலைமை எத்தகையது என்பதை அவர் தமக்குள்ளேயே சிந்திக்கலானார். அவருக்கு வயது இப்பொழுது இருபத்தெட்டு. கல்லூரிப் படிப்புகளையெல்லாம் பூர்த்தி பண்ணிவிட்டு ஒரு பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியராக அமர்ந்திருந்தார். அவர் விவாகம் பண்ணிக்கொண்டவர். குடும்பத்துக்குப் பணியாற்றக் கடமைப்பட்டிருந்தார். விவேகத்தையும், வைராக்கியத்தையும் கடைப்பிடிக்குமிடத்துக் குடும்பகாரியம் நிறைவேறாது. குடும்ப காரியம் நிறைவேறுவது என்றால் விவேகத்தையும், வைராக்கியத்தையும் அடைய முடியாது. தான் எதைச் செய்வது என்று எண்ணி அவர் திகைத்து நின்றார்.

(தொடரும்…)

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி